கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது வழித்தட பணி இந்த மாத இறுதியில் தொடங்க திட்டம்


கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது வழித்தட பணி இந்த மாத இறுதியில் தொடங்க திட்டம்
x

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது வழித்தட பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் குண்டூர்-பீபி நகர் இடையே 239 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரட்டை வழித்தடம் அமைக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்து 853 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 2027-28-ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் நிறைவு பெறும்.

இந்த திட்டம் முடிவடைந்தால், இந்த வழித்தடத்தை பயன்படுத்தி சென்னை வரும் பயணிகள் ரெயிலின் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இதேபோல், சரக்கு ரெயில்களில் ஒரு பெட்டிக்கான கட்டணம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை குறைய வாய்ப்புள்ளது.

இம்மாத இறுதியில்..

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில பயணி ஒருவரை பெண் டிக்கெட் பரிசோதகர் தாக்கிய விவகாரத்தில், பரிசோதகர் நடந்து கொண்ட செயல் தவறானது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்ட ரெயில்வே பணியாளர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கி வருகிறோம். தொடர்ந்து அவற்றை வழங்குவோம்.

சென்னை கடற்கரை-எழும்பூர் வரையிலான 4-வது வழித்தட பணிகள் இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளின் போது செயல்படுத்தப்படும் போக்குவரத்து மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story