பாதியில் நின்ற தரைப்பால பணி மீண்டும் தொடங்கியது


பாதியில் நின்ற தரைப்பால பணி மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேரிங்கிராசில் பாதியில் நின்ற தரைப்பால பணி மீண்டும் தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

சேரிங்கிராசில் பாதியில் நின்ற தரைப்பால பணி மீண்டும் தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மழைநீரும், கழிவுநீரும்...

ஊட்டியின் மையப்பகுதியான சேரிங்கிராசில் ஐ பவுண்டேஷன் பகுதியில் இருந்து வரும் மழைநீர் மற்றும் ரோஜா பூங்கா பகுதியில் இருந்து வரும் மழைநீர் சந்திக்கிறது. இதனுடன் கழிவுநீரும் கலக்கிறது. இந்த இடத்தில் அடைப்புகள் இருப்பதால், கழிவுநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் தரைப்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

ஆனால் சேரிங்கிராஸ் என்பது ஊட்டி நகரின் மையப்பகுதி என்பதாலும், பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் இடம் என்பதாலும் கிறிஸ்மஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம், பொங்கல் பண்டிகை என தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தரைப்பால பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

மீண்டும் பணி தீவிரம்

இந்த நிலையில் கோடை சீசன் விரைவில் தொடங்க இருப்பதாலும், தொடர் பனி காரணமாக தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருப்பதாலும் மீண்டும் தரைப்பால பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி என்ஜினியர் சேர்மகனி கூறியதாவது:-

சேரிங்கிராஸ் சந்திப்பில் தரைப்பாலம் அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. 15 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடம் என்பதால் ஒரு வாரத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். ஒரு வாரத்தில் பணிகள் முடிந்தாலும், ஒரு மாதத்திற்கு பிறகுதான் இந்த பாலம் வழியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இந்த இடத்தில் தற்போது மழைநீர் மற்றும் கழிவுநீர் சேர்ந்து வருவதால் தினமும் நகராட்சி வாகனம் மூலம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. தரைப்பால பணிகள் முடிந்த பிறகு இந்த தொந்தரவு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story