வாங்கிய கடனை கட்ட முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கரூரில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தற்கொலை
கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி (38) என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் வினோத்குமார் குடும்பச் செலவுக்காக சிலரிடம் கடனாக பணம் வாங்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் வினோத்குமார் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் வினோத்குமார் தூக்கில் தொங்கினார்.
வழக்கு
இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோத்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.