லாரியில் ஏற்றிய போது கரும்பு கட்டு சரிந்து விழுந்து தொழிலாளி பலி


லாரியில் ஏற்றிய போது கரும்பு கட்டு சரிந்து விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே லாரியில் ஏற்றிய போது கரும்பு கட்டு சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். அவரது உடலை போலீசாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

நடுவீரப்பட்டு,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் லாரிகளில் ஏற்றப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் அடுத்த பத்திரக்கோட்டை பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது. இதில் பத்திரக்கோட்டை பட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த தொழிலாளி தனசேகர் (வயது 53), அதே பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கரும்பு கட்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது லாரியில் இருந்த கரும்பு கட்டு ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து தனசேகர் மீது விழுந்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அடக்கம் செய்ய முயற்சி

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக எடுத்து சென்றனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் தனசேகர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் தனசேகர் எப்படி இறந்தார் என அறிய, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய எடுக்க வேண்டும் எனக்கூறி அவரது உடலை ஒப்படைக்குமாறு போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் தனசேகர் உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story