குட்டையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
குட்டையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
தா.பழூர்:
குட்டையில் தவறி விழுந்தார்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் புது காலனி தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். பின்னர் அவர் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள குட்டை கரை என்ற சிறிய குட்டையின் மதகில் அமர்ந்திருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மதகில் இருந்து 10 அடி பள்ளத்தில் உள்ள குட்டையில் தவறி விழுந்தார். இதையறிந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாவு
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து புண்ணியமூர்த்தியின் மனைவி கஸ்தூரி அளித்த புகாரின்பேரில் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.