சிறுநீர் கழிக்க சுவர் ஏறி குதித்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம்
சிறுநீர் கழிக்க சுவர் ஏறி குதித்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் நெய்க்காரப்பட்டியை அடுத்த கோடிக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சக்தி (வயது 22). இவர் கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள பருப்பு மண்டியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு சென்றவர், நேற்று அதிகாலை 5 மணியளவில் சிறுநீர் கழிக்க மண்டியில் இருந்து வெளியே வந்தார். அப்போது மெயின் கேட் பூட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் மண்டியின் காம்பவுண்டு சுவர் மீது சக்தி ஏறி குதித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மரின் மின்சார வயர் எதிர்பாராத விதமாக சக்தி மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.