தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை


தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
x

நெல்லை அருகே தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தொழிலாளி கொலை

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி கோனார் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் மாயாண்டி (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று சீவலப்பேரியில் இருந்து கலியாவூர் செல்லும் ரோட்டில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் மற்றும் சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாயாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை சமீபத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இரு தரப்புக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. சிதம்பரம் கொலை வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பில் வழக்கில் தீவிரம் காட்டிய நிலையில் மாயாண்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

மாயாண்டி, அந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளவரின் உறவினர் ஆவார். எனவே, சாட்சிகளை மிரட்டும் வகையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர கொலை சம்பவத்தை தொடர்ந்து சீவலப்பேரி பகுதியில் பதற்றம் நிலவுவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story