உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்
அகஸ்தியன்பள்ளியில் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
அகஸ்தியன்பள்ளியில் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வார காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் உப்பு உற்பத்தியாளர்கள் முழுவீச்சில் உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழைக்காலம் தொடங்கியவுடன் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுவிடும். ஆண்டு ஒன்றுக்கு வேதாரண்யம் பகுதியில் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.
உப்பு வாரும் பணி
இந்த ஆண்டு அடிக்கடி பருவம் தவறி பெய்த மழையால் இலக்கை எட்ட முடியாத நிலையில், தற்போது மழை கால விற்பனைக்கு உப்பை சேமித்து வைக்க உப்பள தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தீவிரமாக உப்பு வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க தார்பாய் மற்றும் பனை ஓலைகளை கொண்டு மூடி வைத்துள்ளனர். தீவிரமாக உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டாலும் இந்த ஆண்டு இலக்கை எட்ட முடியாத நிலையிலேயே உப்பள தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தியில் லாபத்தை எட்ட முடியாத நிலையில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.