தொழிலாளியின் வீடு தீப்பிடித்து எரிந்தது
தா.பழூர் அருகே தொழிலாளியின் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.
வீடு தீப்பிடித்து எரிந்தது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 30), கூலி தொழிலாளி. இவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டை பூட்டி விட்டு கொளஞ்சிநாதன் அதே பகுதியில் வயல் வேலைக்கு சென்று இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 5 மணியளவில் திடீரென கொளஞ்சிநாதன் ஓட்டு வீடு தீ பற்றி எரிந்தது.
அருகே அதிகளவு வீடுகள் இல்லாததால் தீப்பிடித்து எரிந்தது தாமதமாகவே மற்றவர்களுக்கு தெரிந்தது. இருந்த போதிலும் அருகே இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தபோது வீட்டிற்குள் சமையல் எரிவாயு சிலிண்டர் இருந்ததால் அது எந்நேரமும் வெடிக்கக்கூடும் என்கிற அச்சத்தில் யாரும் தீயை அணைக்க முன்வரவில்லை.
ரூ.50 ஆயிரம் பொருட்கள் நாசம்
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெயங்கொண்டத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்து முற்றிலும் வீடு எரிந்து நாசமானது. மேலும், வீட்டில் வைத்திருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட மரச்சாமான்கள் எரிந்து நாசமாயின. பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிமணிகள், பல்வேறு ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.