வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு
மயிலாடுதுறை அருகே வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டமானது நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் 147 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஊரக தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவைகளை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் வட்டாரத்தில் உலக வங்கி குழுவினர் சோவிக்மித்ரா, அமர்ஜோதி மகாபத்ரா, ராமசுப்பிரமணியன், சென்னை மாநில அலுவலர்கள் பாபு, சக்ரபாணி, ஜெகன்குமார், திவ்யா, மாவட்ட செயல் அலுவலர் சுந்தரப்பாண்டியன் ஆகியோர் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வு
முன்னதாக செழுமை உளுந்து உற்பத்தியாளர் குழுவினர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட தொடக்க நிதியை கொண்டு விதை உளுந்து மற்றும் உரங்களை வாங்கி சாகுபடி செய்து பயன் பெறுவதையும், அறிவகம் தொழில் குழு உறுப்பினர்கள் இணைந்து திட்டத்தின் தொடக்க நிதியை பெற்று சோப் ஆயில், பினாயில் பொருட்களை தயாரிப்பதையும், கொேரானா காலங்களில் வெளியூரிலிருந்து புலம்பெயர்ந்து வந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை கொண்டு சிமெண்டு தொழில் செய்து வரும் பயனாளியையும், சமுதாய பண்ணை பள்ளி மூலம் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பெற்று அசோலா, தீவனப்புல் போன்றவைகளை பயிர் செய்து வருபவர்களையும், சமுதாய திறன் பள்ளி மூலம் வெல்டிங் பயிற்சி பெற்று வரும் பயனாளிகளையும் சந்தித்து செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
முன்னதாக மரகன்றுகள் நட்டும், கறவை மாடு வளர்ப்பு பயனாளிகளுக்கு தீவனம் மற்றும் நோய் தடுப்பு மருந்து பொருட்களை வழங்கினர்.