உப்புக்கோட்டை பகுதியில் வாழை விளைச்சல் அமோகம்
உப்புக்கோட்டை பகுதியில் வாழை அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணையின் பாசனம் மூலம் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கடைமடை பகுதிகளான உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், குண்டல்நாயக்கன்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டியில் கற்பூரவல்லி, நாலிபூவன், நாட்டு வாழை, ரஸ்தாலி, திசுவாழை, செவ்வாழை உள்ளிட்ட வாழை மரங்கள் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் போதிய நீர்வரத்து மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருப்பதால் உப்புக்கோட்டை பகுதியில் வாழை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. அதே நேரத்தில் வாழைத்தார் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் கிலோ ரூ.20-க்கு விற்பனையான திசு வாழைக்காய் தற்போது கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. நாலிபூவன் கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரையிலும், செவ்வாழை ரூ.35 முதல் ரூ.50 வரையிலும் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் 1,200 வாழைகளை சாகுபடி செய்துள்ளேன். இப்பகுதியில் நல்ல மழை பெய்ததால் வாழை அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்போது வாழைத்தார் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் உரிய லாபம் கிடைக்கும். மேலும் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் இங்கு வந்து வாழைத்தார்களை கொள்முதல் செய்து வருகின்றனர்" என்றார்.