மணமேடையில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்


மணமேடையில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்
x

மாப்பிள்ளை பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அண்ணன் மிரட்டியதால் மணமேடையில் திருமணத்தை இளம்பெண் நிறுத்திய சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

இதையடுத்து இரு வீ்ட்டாரும், அவர்களின் உறவினர்களும் அங்கு வந்த வண்ணம் இருந்ததால் கோவில் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. முகூர்த்த நேரம் நெருங்கியதை அடுத்து மணமகளை அலங்கரித்து மணமேடைக்கு அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர்.

மாப்பிள்ளை பிடிக்கவில்லை

மாற்றுத்திறனாளியான மணமகன் சென்னை ஐ.ஐ.டி.யில் மாதம் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே திருமணமான அவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி இறந்துவிட்டதால் 2-வது திருமணத்துக்காக இளம்பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதை அறிந்த மணமகளின் அண்ணன், மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை. அதனால் திருமணம் செய்துகொள்ள கூடாது, மீறி திருமணம் செய்து கொண்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என தனது தங்கையிடம் கூறினார்.

திருமணத்தை நிறுத்தினார்

இதனால் மணப்பெண், இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என்று கூறி மணமேடையில் இருந்து கீழே இறங்கி வெளியேறினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த பெண் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

பல்வேறு கனவுகளுடன் இருந்த மணமகனும் மனமுடைந்து காணப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு நிசப்தமான நிலை உருவானது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்படாததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்களும் சோகத்துடன் அங்கிருந்து வெளியேறினர்.

தன்னுடைய அண்ணனுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story