வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பி


வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பி
x

குடியாத்தம் அருகே வங்கியில் வாங்கிய கடன் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

வங்கி கடன்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் வி.டி.பாளையத்தை அடுத்த பூஜாரிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் கோபால் (வயது 23), பாஸ்கர் (20). இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். அந்த கடன் தொகையை வங்கியில் சரியானபடி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தனியார் வங்கி ஊழியர்கள், பாஸ்கரை கடன் தவணை செலுத்துமாறு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாஸ்கர் பெற்றோரிடம் வீடு கட்ட வங்கியில் வாங்கிய கடனை அண்ணன் கோபால் ஊதாரித்தனமாக செலவு செய்து வருகிறார். வங்கி அதிகாரிகள் என்னை கடன் தவணையை கட்டச் சொல்லி தொந்தரவு செய்கிறார்கள் என கேட்டுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி எரிப்பு

அப்போது அவருக்கும், அண்ணன் கோபாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், மோட்டார் சைக்கிளுக்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அண்ணன் கோபால் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் வலிதாங்க முடியாமல் அலறிய கோபாலை, பாஸ்கரும், வீட்டில் இருந்தவர்களும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பாஸ்கர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கோபால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பாஸ்கர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

அண்ணனை, தம்பியே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story