அண்ணனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தம்பி
தூத்துக்குடி அருகே அண்ணனை காரில் அழைத்துச்சென்று இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருடைய மகன் நல்லதம்பி (வயது 34). லாரி டிரைவர். இவர் ஏற்கனவே லாரி வைத்து தொழில் செய்தார்.
தொடர்ந்து நஷ்டமானதால் பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். மேலும் இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதற்கிடையே தனது தம்பி முத்துராஜிடமும் (32) பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை திருப்பி கொடுப்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
காரில்....
தொடர்ந்து கடன் அதிகரித்ததால், கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்ட நல்லதம்பி சில்லாங்குளத்தில் உள்ள ஒரு சொத்தை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டாராம். இதனால் முத்துராஜிக்கும், நல்லதம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நல்லதம்பியை, முத்துராஜ் தனது மற்றொரு உறவினருடன் சேர்ந்து காரில் பண்டாரம்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அடித்துக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜ், இரும்பு கம்பியால் நல்லதம்பியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துராஜை கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தொடர்ந்து இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் கேட்டபோது, `சிப்காட் போலீஸ் சரகத்தில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் இறந்தவர் அதிக அளவில் கடன் வாங்கி இருப்பதாகவும், அடிக்கடி வீட்டில் மதுபோதையில் தகராறு செய்து வந்ததாகவும் தெரியவந்து உள்ளது. அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்து எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்று கூறினார்.