செய்வினை செய்ததாக கூறி அக்காளை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி


குன்றாண்டார் கோவில் அருகே செய்வினை செய்ததாக கூறி அக்காளை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு பஸ்சில் ஏறி தப்ப முயன்றவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

புதுக்கோட்டை

பெரியப்பா மகன்

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் அருகே உள்ள வைத்திக்கோவிலை சேர்ந்தவர் வடிவேலு (வயது 76), விவசாயி. இவரது மனைவி மாரிக்கண்ணு (55). இவருடைய பெரியப்பா சின்னையா மகன் குணசேகரன் (49). இவருக்கு திருமணமாகவில்லை. மேலும், இவர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து உள்ளார்.

மாரிக்கண்ணு வீட்டின் அருகே வசித்து வந்த குணசேகரனுக்கு தம்பி என்ற முறையில் அவர் தினமும் சாப்பாடு வழங்கி வந்துள்ளார்.

கத்தியால் குத்திக்கொலை

இந்தநிலையில் ேநற்று காலை வீட்டின் வழியே மாரிக்கண்ணு சென்றபோது அவரை அழைத்த குணசேகரன் எனக்கு தினமும் சாப்பாட்டில் செய்வினை செய்து நீ தானே கொடுக்கிறாய் என கூறி திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்தபோது அவரது இடது கையிலும் வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த மாரிக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் குணசேகரனை பிடிக்க முயன்றனர். அப்போது கிட்ட வந்தால் உங்களையும் குத்தி விடுவேன் எனக்கூறி கத்தியை தூக்கி வீசிவிட்டு குணசேகரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையாளிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாரிக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய குணசேகரனை போலீசார் தேடிய போது அந்த வழியாக சென்ற பஸ்சில் ஏறி தப்ப முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, கீரனூர் சப்-இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி குணசேகரனை மடக்கி பிடித்து கைது செய்தார். மேலும் குணசேகரன் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் கைப்பற்றினா். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். பின்னர் அவர் கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story