அபராதம் விதித்த போலீசாரை துரத்திய வாலிபர்கள்
கடலூரில் அபராதம் விதித்த போலீசாரை வாலிபர்கள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் நிலையத்தில் அபராதம்
கடலூர் பஸ் நிலையத்திற்குள் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் ஒரு காரில் 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பஸ் நிலையத்திற்குள் காரை ஓட்டி வந்ததால் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் ஒருவர், போலீசார் பேசுவதை தான் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினார். இதை பார்த்த போலீசார், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றனர்.
போலீசாரை துரத்திய வாலிபர்கள்
இருப்பினும் அந்த வாலிபர்கள், போலீசாரிடம் நீங்களே குடித்து விட்டு பணிபுரிகிறீர்கள் என்று கூறி தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து போலீசார், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். உடனே அந்த வாலிபர்கள், போலீசாரை சிறிது தூரம் துரத்திச் சென்றனர். இருப்பினும் போலீசார் நிற்காமல் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.