இளைஞர் பெருமன்றத்தினர் அரை நிர்வாண போராட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இளைஞர் பெருமன்றத்தினர் அரை நிர்வாண போராட்டம் ; பிரதமா் நரேந்திர மோடிக்கு தபால் அட்டை அனுப்பி வைத்தனர்
மணிப்பூரில் கடந்த 80 நாட்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தின்போது 2 பெண்கள் நிர்வாணமாக்கி துன்புறுத்தப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்தும் பெண்களை துன்புறுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடந்தது. திருவாரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைஅருள்ராஜன் முன்னிலை வகித்தார். இதில் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை கண்டித்தும், பெண்களை வன்கொடுமை செய்தவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷம் எழுப்பினா். தொடர்ந்து மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தபால் அட்டை மற்றும் மின்னஞ்சல் அனுப்பி வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் சரவணன், வீரபாண்டியன், நல்லசுகம், பாக்யராஜ், செந்தில்குமார், கார்த்தி, ரஞ்சித், பழனிவேல், பாலமுருகன், பாரத செல்வன் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.