வியாபாரி தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்கள்
நாகர்கோவிலில், வியாபாரி தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை மீட்டு போலீசில் ஒப்படைத்த வாலிபர்களை போலீசார் பாராட்டினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில், வியாபாரி தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை மீட்டு போலீசில் ஒப்படைத்த வாலிபர்களை போலீசார் பாராட்டினர்.
சாலையில் கிடந்த ரூ.10 ஆயிரம்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்(வயது35), சந்திரன் (33). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மணிமேடை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சில 500 ரூபாய் நோட்டுகள் கிடந்தன. இதனை கண்ட நண்பர்கள் அதை எடுத்து பார்த்த போது ரூ.10 ஆயிரம் இருந்தது.
இதையடுத்து அந்த பணத்தை நேர்மையுடன் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
வியாபாரியிடம் ஒப்படைப்பு
இதற்கிடையே கோட்டார் பகுதியை சேர்ந்த வியாபாரி விஜய ராமலிங்கம் (வயது 41) என்பவர் தனது பணம் ரூ.10 ஆயிரம் சாலையில் தொலைந்து விட்டதாக கோட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்து சென்ற போது ரூ.10 ஆயிரம் தவறி விட்டதாக கூறினார். இதையடுத்து அவர் கூறிய அடையாளங்களை சரி பார்த்த போது அந்த பணம் விஜய ராமலிங்கம் தவற விட்ட பணம் தான் என்பது உறுதியானது. இதையடுத்து பணத்தை விஜய ராமலிங்கத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் நேர்மை குணத்துடன் கீழே கிடந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த நண்பர்கள் சதீஷ் மற்றும் சந்திரனை போலீசார் பாராட்டினர்.
----