தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலையில் அதிக இடங்களை பெறவேண்டும்


தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலையில்  அதிக இடங்களை பெறவேண்டும்
x

தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலையில் அதிக இடங்களை பெறவேண்டும்

திருவாரூர்

போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று மத்திய அரசு வேலையில் தமிழக இளைஞர்கள் அதிக இடம் பெற வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

நான் முதல்வன் திட்டம்

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் உங்களது எண்ணத்தை பெரிய அளவில் வளர்த்து கொள்ள வேண்டும். நமது வேலை, நமது திறமை உலக அளவில் பேசப்படவேண்டும். அதற்கான வேலைகளை அணுகுவது எவ்வாறு, எப்படி பயிற்சி மேற்கொள்வது என்பதை விளக்குவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

அதிகமான இடங்களை பெற வேண்டும்

மத்திய அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு உங்களை தயார் செய்து கொள்வதற்காக இந்த பயிற்சி அரசால் கட்டணமின்றி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாட்கள் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் கொண்டு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் 150 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற உள்ளனர். இந்த வாய்ப்பினை தாங்கள் அனைவரும் முனைப்போடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போட்டிதேர்வுகளில் வெற்றி பெற்று தமிழக இளைஞர்கள் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் அதிகமான இடங்களை பெற வேண்டும். கடின உழைப்பே, வெற்றிக்கு வித்திடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திறன் மேம்பாட்டுக்கழக உதவி இயக்குனர் செந்தில்குமார், திரு.வி.க. கல்லூரி முதல்வர் ராஜாராம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சோழஅழகன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story