கோவிலுக்குள் புகுந்து நாகர் சிலையை சேதப்படுத்திய வாலிபர்
குலசேகரம் அருகே கோவிலுக்குள் புகுந்து நாகர் சிலையை சேதப்படுத்திய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே கோவிலுக்குள் புகுந்து நாகர் சிலையை சேதப்படுத்திய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அம்மன் கோவில்
குலசேகரம் அருகே மங்கலம் என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் நாகர் வழிபாட்டு பீடமும் இருக்கிறது. அது இரும்பு கம்பிகளால் கூண்டு போன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் கோவிலுக்குள் வந்து அங்கிருந்த நாகர் பீடத்திற்குள் புகுந்து உள்புறமாக கதவைப்பூட்டி கொண்டு ரகளையில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த பொருட்களை எடுத்து நாகர் சிலை மீது வீசினார். இதனைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, அவரை வெளியேறுமாறு கூறினார்கள். அப்போது அந்த வாலிபர் வெளியேறாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதுடன் நாகர் சிலையையும் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் விசாரணை
இதுபற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கும் அவர் ரகளையில் ஈடுபட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மங்கலம் புதுக்குளம் பகுதியை சேர்ந்த அனீஷ் (வயது 30) என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்து, போலீஸ் நிலையம் வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.