இறைச்சி கழிவுகளை கொட்ட வந்த டெம்போவை சிறைபிடித்த இளைஞர்கள்
தக்கலை அருகே நள்ளிரவில் இறைச்சி கழிவுகளை கொட்ட வந்த டெம்போவை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.
தக்கலை:
தக்கலை அருகே நள்ளிரவில் இறைச்சி கழிவுகளை கொட்ட வந்த டெம்போவை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.
கழிவுகள் ஏற்றிய டெம்போ
தக்கலை அருகே உள்ள சரல்விளையில் இருந்து மேக்காமண்டபத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஈத்தவிளை பகுதியில் திருவிதாங்கோடு பட்டணம் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயின் கரையில் இரவு நேரத்தில் மர்மநபர்கள் கழிவுகளை கொட்டி சென்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. எனவே கழிவுகளை கொட்டி செல்லும் நபர்களை பிடிக்க இளைஞர்கள் அந்த பகுதியில் கண்காணித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த வழியாக கழிவுகளோடு ஒரு டெம்போ செல்வதை கவனித்த இளைஞர்கள் டெம்போவை துரத்தி சென்றனர்.
சிறைபிடிப்பு
பின்னர் கழிவுகளுடன் டெம்போவை அவர்கள் சிறைபிடித்தனர். மேலும் இதுகுறித்து கோதநல்லூர் பேரூராட்சி தலைவி கிறிஸ்டல் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு துணைத்தலைவர் டேவிட், கவுன்சிலர் ஆலிவர் சேம்ராஜ் ஆகியோர் அங்கு விரைந்தனர். பின்னர் போலீசாரும் விரைந்து வந்து டெம்போவை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இறைச்சி கழிவுகளை கொட்ட வந்தவர்கள் தக்கலை பகுதியை சேர்ந்த சுனில் (31), மணிகண்டன் (41) என தெரியவந்தது.
மார்த்தாண்டம் பகுதியில் இருந்து கழிவுகளை ஏற்றிய அவர்கள் கால்வாய் கரையில் கொட்ட வந்துள்ளனர். மேலும் கோதநல்லூர் பேரூராட்சி மூலம் கழிவுகளை கொட்ட வந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது.