ஈரோட்டில் துணிகரம்: டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை- ரூ.3 லட்சம் கொள்ளை; வெள்ளிப்பொருட்களையும் அள்ளிச்சென்றனர்
ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை, ரூ.3 லட்சம் மற்றும் வெள்ளிப்பொருட்களையும் அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை, ரூ.3 லட்சம் மற்றும் வெள்ளிப்பொருட்களையும் அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
டாக்டர் வீடு
ஈரோடு -பெருந்துறை ரோடு டாக்டர் தங்கவேல் வீதியை சேர்ந்தவர் விஷ்ணுதீபக் (வயது 44). இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு யோக சந்திரான் என்ற மகன் உள்ளான். விஷ்ணு தீபக் தனது மகனுக்கு மொட்டை போடுவதற்காக குடும்பத்தினருடன் கடந்த 22-ந் தேதி விருதாசலத்துக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை விஷ்ணு தீபக் தனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
நகை -பணம் கொள்ளை
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. லாக்கரில் இருந்த 45 பவுன் நகை, ரூ.3 லட்சம் மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்தது. அதை மர்ம நபர்கள் யாரோ கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
மேலும் போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மோப்பநாய் மோப்பம் பிடிக்காதிருக்க கொள்ளையர்கள் வீட்டிற்குள் மிளகாய் பொடியும் தூவி சென்றனர்.
இதுபற்றி விஷ்ணு தீபக் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா
விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
மோப்ப நாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை நடந்த வீடு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அச்சம்
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆட்கள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் மாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய தெலுங்கானாவை சேர்ந்த 3 தம்பதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.