போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து விவசாயியிடம் நூதன முறையில் பணம் திருட்டு


போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து  விவசாயியிடம் நூதன முறையில் பணம் திருட்டு
x

போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து விவசாயியிடம் நூதன முறையில் பணம் திருட்டு

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து விவசாயியிடம் நூதன முறையில் பணத்தை திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலி ஏ.டி.எம். கார்டு

பரமத்திவேலூரில் இருந்து பொத்தனூர் செல்லும் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் காக்காயம் தோட்டத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணி என்பவர் பணம் எடுப்பதற்காக வந்தார். இதையடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை உள்ளே நுழைத்து ரகசிய எண்களை அழுத்தினார். அப்போது எந்திரத்தில் பணம் இல்லை என்று வந்ததை தொடர்ந்து அவர் ஏ.டி.எம். கார்டை வெளியே எடுத்து உள்ளார்.

அப்போது பாலசுப்பிரமணியத்திற்கு பின்னால் நின்ற நபர் இந்த எந்திரத்தில் பணம் இல்லை என்றும், வேறு ஒரு எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி கார்டை வாங்கினார். பின்னர் பாலசுப்ரமணியம் நானே எடுத்து கொள்கிறேன் கார்டை கொடுத்து விடுங்கள் என்று கூறி விட்டு கார்டை அந்த நபரிடம் இருந்து வாங்கினார். அப்போது பாலசுப்பிரமணியம் வைத்திருந்த கார்டு போல் போலி ஏ.டி.எம். கார்டு ஒன்றை அந்த நபர், பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

பரபரப்பு

இதையடுத்து சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியத்தின் செல்போன் எண்ணுக்கு ரூ.40 ஆயிரம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தனது மகனுக்கு போன் செய்து தனது ஏ.டி.எம் கார்டை முடக்கம் செய்தார். இதனை தொடர்ந்து பாலசுப்ரமணியம் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் நூதன முறையில் பணத்தை திருடி சென்றவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story