டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு
மாரண்டஅள்ளி அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து மர்ம நபர்கள் காப்பர் கம்பிகளை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து மர்ம நபர்கள் காப்பர் கம்பிகளை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மின்சார டிரான்ஸ்பார்மர்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கெண்டேயனஅள்ளி கிராமத்தில் மின்சார பற்றாக்குறையால் வீடு, நிலங்களுக்கு போதிய மின்னழுத்தம் கிடைக்காததால் மோட்டார், மிக்சி, கிரைன்டர், பல்புகள் அடிக்கடி பழுதாகி வந்தன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து மக்களின் இந்த பிரச்சினையை தீர்க்க மின் வாரியம் சார்பில் கெண்டேயனஅள்ளி கிராமத்தில் உள்ள மஞ்சு மாரியம்மன் கோவில் அருகில் சமீபத்தில் புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மின் இணைப்பை துண்டித்து மின்சார டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர். கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் கிராமமக்கள் இரவு முழுவதும் கடும் அவதிக்குள்ளாகினர்.
வலைவீச்சு
இதுகுறித்து கிராம மக்கள் மாரண்டஅள்ளி மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் இந்த திருட்டு சம்பவம் குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் அருணகிரி மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பி மற்றும் ஆயிலை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.