நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 5½ பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரசு பள்ளி ஆசிரியர்
நல்லம்பள்ளி அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப்குமார் (வயது 45). இவர் தாதநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபா. இவர் ஒட்டப்பட்டி அவ்வைநகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் பிரதாப்குமார் மற்றும் சுபா ஆகியோர் வழக்கம்போல் பள்ளிகளுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மாலை வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தனர்.
நகை திருட்டு
அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 5½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் வீட்டில் 5½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.