மளிகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.2.10 லட்சம் திருட்டு


மளிகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.2.10 லட்சம் திருட்டு
x

தஞ்சையில் நூதன முறையில் மளிகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.2.10 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் நூதன முறையில் மளிகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.2.10 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மளிகைக்கடை உரிமையாளர்

தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது46). இவர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அஜிஷ் நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் தஞ்சை இ.பி. காலனியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்து கொண்டு அந்த பணத்தை ஒரு பையில் வைத்து மளிகைக்கடைக்கு எடுத்து வந்தார்.

பின்னர் அவர் பணத்துடன் கூடிய பையை மளிகைக்கடையில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு வியாபாரத்தில் கவனம் செலுத்தினார். அந்த நேரத்தில் மர்மநபர் ஒருவர் மளிகைக்கடைக்கு வந்தார். அவர் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடையை நோட்டமிட்டார். அப்போது மளிகைக்கடை மேஜையில் பணப்பை இருப்பதை பார்த்து அதை எப்படியாவது எடுத்து செல்ல வேண்டும் என அவர் முடிவு செய்தார். ஆனால் மளிகைக்கடைக்குள் ராஜேந்திரன் இருந்ததால் அவரை கடையைவிட்டு வெளியே வர வைக்க அந்த மர்மநபர் திட்டம் தீட்டினார்.

ரூ.2.10 லட்சம் திருட்டு

உடனே மளிகைக்கடைக்கு வெளியே சில ரூபாய் நோட்டுகளை அந்த மர்மநபர் வீசினார். பின்னர் அவர், மளிகைக்கடைக்காரரிடம் கடைக்கு வெளியே ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதாகவும், இது உங்களுக்கு சொந்தமானதா? எனவும் கேட்டார். தனது பணம் தான் சிதறி கிடப்பதாக நினைத்து மளிகைக்கடையை விட்டு ராஜேந்திரன் வெளியே வந்து, கீழே கிடந்த ரூபாய் நோட்டுக்களை எல்லாம் எடுத்து கொண்டு கடைக்குள் சென்றார். அப்போது மேஜையில் வைத்து இருந்த பணப்பையை காணவில்லை.

கடைக்கு வெளியே ரூபாய் நோட்டு சிதறி கிடப்பதாக கூறிய மர்மநபரையும் காணவில்லை. தனது கவனத்தை திசை திருப்பிவிட்டு வங்கியில் இருந்து எடுத்து வந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டதை அறிந்து ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர், இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story