மூதாட்டியிடம் தங்க கைக்கடிகாரம் பறித்த 2 பேர் கைது
மூதாட்டியிடம் தங்க கைக்கடிகாரம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அய்யர்பங்களா காவேரி தெரு, ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 66), பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையை மர்மநபர் ஒருவர் பறித்து கொண்டு தப்பினார். அதில் 1½ பவுன் தங்க கைக்கடிகாரம், செல்போன், 1,500 ரூபாய் மற்றும் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்தன. இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் பையை பறித்து சென்றது கேசவசாமி தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன் விஜி என்ற சுப்பு (24) என்பது தெரியவந்தது. மேலும், அவர் வேலூர் மாவட்டம் கோணவட்டத்தை சேர்ந்த முதார்சீர் (35) என்பவரிடம் தங்க கைக்கடிகாரத்தை விற்க கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.