தொப்பூரில் கோவில் விழாவில் மூதாட்டியிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே உள்ள சந்திரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 60). இவர் தொப்பூர் சோதனை சாவடி பகுதியில் உள்ள ஞானலிங்கேசுவரர் உடனுறை ஞானாம்பிகை கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு நேற்று சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், ஜோதி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை தாலியுடன் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி ஜோதி நகையை பறி கொடுத்ததால் கதறி அழுதார். அவரிடம், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் தேடி பார்த்தபோது, தங்க தாலி மட்டும் கிடந்தது. அதனை போலீசார் மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் விழாவில் மூதாட்டியிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.