3 இடங்களில் ரூ.25 ஆயிரம்- மடிக்கணினி திருட்டு
அதிராம்பட்டினம் பகுதியில் 3 இடங்களில் ரூ.25 ஆயிரம் மற்றும் மடிக்கணினியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அதிராம்பட்டினம் பகுதியில் 3 இடங்களில் ரூ.25 ஆயிரம் மற்றும் மடிக்கணினியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பணம் திருட்டு
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான கரையூர் தெரு மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு சொந்தமான அடகு கடை சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள், அந்த அடகு கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றனர். அதேபோல அண்ணா நகர் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் அங்கு பிஸ்கட் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்த ஏஜென்சியிலும் மர்ம நபர்கள் புகுந்து ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றனர்.
அடுத்தடுத்து கைவரிசை
அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை நடுத்தெரு பகுதியில் உள்ள முருகேசன் என்பவரின் கணினி மையத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்து மடிக்கணினியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஒரே நாள் இரவில் 3 இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இந்த திருட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் 3 இடங்களிலும் திருடியவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள் அச்சம்
அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து திருடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 3 இடங்களில் ஒரே நாள் இரவில் நடந்த திருட்டு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினர். திருட்டுகளை தடுக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.