அடுத்தடுத்த கடைகளில் பணம் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்த கடைகளில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்த கடைகளில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மளிகை கடை
கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சாலையில் மாதேப்பட்டி உள்ளது. இங்கு பச்சிகானப்பள்ளியை சேர்ந்த சின்னசாமி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவரது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அவர் வந்து பார்த்த போது கடையில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இரவு மர்ம நபர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து சின்னசாமி கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மருந்து கடை
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் மேம்பாலம் அருகில் பிரபல நிறுவனத்தின் மருந்து கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதேபோன்று கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் வணிக வளாகம் ஒன்றில், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை வந்து பார்த்த போது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.
அச்சம்
மேலும் உள்ளே வைத்திருந்த ரூ.4 ஆயிரம் திருட்டு போனது. இது குறித்து அதன் மேலாளர் விக்னேஷ் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்த கடைகளில் பணம் திருட்டு போன சம்பவம் வியாபாரிகள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.