நல்லம்பள்ளி அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தர்மபுரி அரசு கலை கல்லூரி பகுதியில் உள்ள நேரு நகரை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது 65). இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மகள் மாணிக்க செல்வி வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 1¾ பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.12 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முத்துலட்சுமியின் மகன் மதுரை மாவட்டத்தில் சார்பு நீதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டப்பட்டி அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெயந்தி (57). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 2 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.