கிட்டம்பட்டியில் டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பிகள் திருட்டு
பாலக்கோடு:
பஞ்சப்பள்ளி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை வரை மின்வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் கிட்டம்பட்டி கிராமத்துக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மரை ஆய்வு செய்தனர்.
அப்போது மின்சாரத்தை துண்டித்து, டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதில் இருந்த காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் சத்யா பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பிகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே நேற்று மதியம் டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்பட்டு, கிட்டம்பட்டிக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டது.