அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு
செம்பட்டி அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் திருட்டு போனது.
செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 51). இவர், எஸ்.கோடாங்கிபட்டி பிரிவு எதிரே உள்ள வணிகவளாகத்தில் மோட்டார் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இதேபோல் பழைய செம்பட்டியை சேர்ந்த, சந்தனவேல் (50) என்பவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். அதே வணிக வளாகத்தில் ஆத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன், டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் தங்களது கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் 3 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் ஜோசப் கடையில் ரூ.5 ஆயிரம், சந்தனவேல் கடையில் ரூ.2 ஆயிரம், ராமச்சந்திரன் கடையில் ரூ.1,500 ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜோசப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் திருடப்பட்ட சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.