துணிக்கடையின் 'ஷட்டரை' உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு


துணிக்கடையின் ஷட்டரை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே துணிக்கடையின் ‘ஷட்டரை’ உடைத்து மர்ம நபர்கள் ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே துணிக்கடையின் 'ஷட்டரை' உடைத்து மர்ம நபர்கள் ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர்.

புதிய துணிக்கடை

கிருஷ்ணகிரியில் லண்டன்பேட்டையில் ஆண்களுக்கான புதிய ரெடிமேட் துணிக்கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த கடையின் உரிமையாளராக சுரேந்தர் என்பவர் உள்ளார். முதல் நாள் என்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து துணிகளை வாங்கி சென்றனர். இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடையின் வழியாக சென்றனர். அப்போது கடையின் 'ஷட்டர்' உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் கடையின் உரிமையாளர் சுரேந்தருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் கடைக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர் இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. தொடர்ந்து அருகில் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் கேரளா பதிவு எண் கொண்ட ஒரு வேன் கடை முன்பு நீண்ட நேரம் நின்று சென்றதும், அதில் வந்த நபர்கள் 'ஷட்டரை' உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஷட்டரை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திறப்பு விழா கண்ட முதல் நாளிலேயே துணிக்கடையில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story