பெரியகுளத்தில் துணிக்கடையில் திருட்டு
பெரியகுளத்தில் உள்ள துணிக்கடையில் திருடுபோனது.
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் கவித்தபிரியா (வயது 43). இவர், வடகரை புதிய பஸ் நிலையம் அருகே துணிக்கடை மற்றும் ஜூவல்லரி நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி இவர், ஜூவல்லரி கடையில் உள்ள நகைகளை துணிக்கடையில் வைத்து பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் துணிக்கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது துணிக்கடையில் இரும்பு ஷட்டர் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு நெம்பி திறக்கப்பட்டு கிடந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கவித்தபிரியா கடைக்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி நகைகள் மற்றும் துணிகள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து அவர் பெரியகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.