ஜவுளிக்கடையில் காவலாளியை கட்டிப்போட்டு லாரிகளில் துணிகளை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்
பழனியில் ஜவுளிக்கடையில் காவலாளியை கட்டிப்போட்டு துணிகளை லாரியில் அள்ளிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனியில் ஜவுளிக்கடையில் காவலாளியை கட்டிப்போட்டு துணிகளை லாரியில் அள்ளிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காவலாளியை கட்டிப்போட்டு...
பழனி இந்திராநகரை சேர்ந்தவர் ஜோதிகணேஷ் (வயது 40). இவர் பழனி எம்.ஜி.ஆர்.நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர், வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
கடையின் இரவு நேர காவலாளியாக, பழனியை சேர்ந்த தேவேந்திரன் (58) என்பவர் பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவில் 3 லாரிகள் மற்றும் ஒரு வேனில் 10-க்கும் மேற்பட்டோர் ஜவுளிக்கடைக்கு வந்தனர். அங்கிருந்த தேவேந்திரனை அடித்து உதைத்து கயிற்றால் கட்டி போட்டனர்.
துணிகள் கொள்ளை
பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், ஜவுளிக்கடைக்குள் நுழைந்தனர். அங்கு ரேக்குகள் மற்றும் தொங்க விட்டிருந்த துணிகளை அள்ளி லாரிகளில் ஏற்றினர். கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையை அரங்கேற்றிய அவர்கள், லாரிகள் மற்றும் வேனில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அப்போது காவலாளி தேவேந்திரனையும் அந்த கும்பல் கடத்தி சென்றனர். மின்னல் வேகத்தில் சென்ற வாகனங்கள், கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அதிகாலையில் போய் சேர்ந்தது.
அங்கு வாகனங்களை நிறுத்திய அவர்கள், தேவேந்திரனை இறக்கி விட்டனர். அவரது சிம்கார்டை பறித்து கொண்டு, செல்போனை மட்டும் கொடுத்து அனுப்பி வைத்தனர். பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு தேவேந்திரன் பஸ்சில் வந்து சேர்ந்தார்.
போலீசில் புகார்
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடை உரிமையாளர் ஜோதிகணேசுக்கு, தேவேந்திரன் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து பதறி அடித்தப்படி கடைக்கு வந்த ஜோதிகணேஷ், நடந்த சம்பவம் குறித்து தேவேந்திரனிடம் விசாரித்தார்.
மேலும் இதுதொடர்பாக பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் ஜோதிகணேஷ் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கடையில் ரூ.2 கோடி மதிப்பிலா துணிகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு சென்று, தடயங்களை சேகரித்தனர். கொள்ளை நடந்த கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பழனி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு நள்ளிரவில் சென்ற லாரிகள், வேன் பற்றிய விவரங்களை சேகரித்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காவலாளியை கட்டிப்போட்டு ஜவுளிக்கடையில் துணிகளை லாரிகளில் அள்ளிச்சென்ற சம்பவம், பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.