வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு
விழுப்புரம் அருகே பட்டப்பகலில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் புகுந்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
செஞ்சி
வங்கி ஊழியர்
விழுப்புரம் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் காணையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா(வயது 28). இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை லட்சுமி நாராயணன் வங்கி வேலைக்கு புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்தில் பிரியாவும் மகளிர் சுய உதவிக்குழு வேலை சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு விழுப்புரத்துக்கு சென்று விட்டார்.
வீட்டின் பின்பக்கம் வழியாக
பின்னர் மதியம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரியா வீ்ட்டின் அறையினுள் சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம் மற்றும் 200 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.