மளிகை கடைக்காரர் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு; வேன் டிரைவர் கைது


மளிகை கடைக்காரர் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு; வேன் டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மளிகை கடைக்காரர் வீட்டில் பூட்டை உடைத்து திருடிய வேன் டிரைவரை போலீசாா் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் மளிகை கடைக்காரர் வீட்டில் பூட்டை உடைத்து திருடிய வேன் டிரைவரை போலீசாா் கைது செய்தனர்.

தங்க சங்கிலி- பணம் திருட்டு

கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்நதவர் வெற்றி செல்வம் மகன் விக்னேஷ் (வயது 24). இவர் இதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். விக்னேஷ், அவரது தந்தை வெற்றி செல்வம் ஆகியோர் பொங்கலையொட்டி சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று ஊர் திரும்பினார்கள்.

வீட்டிற்கு வந்து போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், உண்டியல் பணம், ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

விக்னேஷ் தனது செல்போனை பார்த்தபோது நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க முயன்ற தகவல் தெரிந்தது.

வேன் டிரைவர் கைது

இதுதொடர்பாக கிழக்கு போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் காந்தி, கனகரத்தினம் மற்றும் போலீசார் செல்லத்துரை, ஜான்சிராணி ஆகியோர் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவரான தில்லை மகன் முத்துக்குமார் என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.20 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story