பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சையில், பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு போனது
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பார்வதி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). இவரது பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இதனால் பாரதி நகரில் உள்ள பெற்றோர் வீட்டை சீனிவாசன் பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்தநாள் காலை பாரதி நகரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் மாடிபகுதி வழியாக வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.