வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டுபோனது.
குன்னம்:
நகைகள்-பணம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நெடுவாசல் கிராமத்தில் உள்ள தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மனைவி தமிழரசி (வயது 56). அப்பாதுரை இறந்துவிட்ட நிலையில் தமிழரசி தனது 2-வது மகன் விஜயகுமாருடன் வசித்து வந்தார். மேலும் இரவில் அவர் அதே பகுதியில் கட்டப்பட்டுள்ள அவரது சம்பந்தி வீட்டிற்கு சென்று தூங்குவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு தமிழரசி வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு, தனது சம்பந்தி வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் தமிழரசி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
போலீசார் விசாரணை
நேற்று அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டிற்கு சென்ற தமிழரசி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டுபோனது தெரியவந்தது.
இது குறித்து மருவத்தூர் போலீசில் தமிழரசி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். அங்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி வீட்டின் பின்னால் ஓடி திரும்பி வந்தது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இச்சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.