200 கோழிகள் திருட்டு இறைச்சி கடைக்காரர் உள்பட 2 பேர் கைது
வெண்ணந்தூர் அருகே 200 கோழிகள் திருட்டில் இறைச்சி கடைக்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெண்ணந்தூர்
கோழி திருட்டு
வெண்ணந்தூர் அடுத்த மின்னக்கல் கிரமத்தில் கடந்த 3 மாதமாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாய தோட்டத்தில் வளர்க்கும் 200-க்கும் மேற்பட்ட கோழிகளை தொடர்ச்சியாக மர்ம நபர்கள் திருடி வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மின்னக்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாணிக்கம் (வயது 47) என்பவரது வீட்டின் அருகில் கோழிக்கூண்டில் இருந்த கோழிகள் இரவில் சத்தம் போட்டுள்ளன. இதையடுத்து மாணிக்கம் அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது 2 பேர் கூண்டில் இருந்த கோழிகளை பிடித்து மோட்டார் சைக்கிளில் இருந்த சாக்குபையில் போட்டதை கண்டு கூச்சலிட்டார். இதனால் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் பாலம்பட்டி பிள்ளையார் கோவில் தெரு, பழனியப்பன் மகன் கார்த்தி (27), அம்மன் கோவில் வீதி பெருமாள் மகன் தேவராஜ் (42) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் திருடிய கோழிகளை மின்னக்கல் கோடி காட்டில் இறைச்சிக்கடை நடத்தி வரும் ராஜீயிடம் விற்பனை செய்ததும் தெரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் ராஜீயிடம் விசாரித்தபோது, திருட்டு கோழிகளை வாங்கியதை அவர் ஒப்புகொண்டுள்ளார்.
இதையடுத்து கோழிதிருட்டில் ஈடுபட்ட கார்த்தி, தேவராஜ் மற்றும் திருட்டு கோழிகளை வாங்கிய இறைச்சி கடைக்காரர் ராஜீ ஆகிய 3 பேர், அவர்கள் திருடிய கோழிகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்தி, தேவராஜ், ராஜீ 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோழிகளை திருடிய 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.