அரசு அதிகாரி பையில் இருந்து 30 பவுன் நகை திருட்டு


அரசு அதிகாரி பையில் இருந்து 30 பவுன் நகை திருட்டு
x

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு அதிகாரியின் பையில் இருந்து 30 பவுன் நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்

அரசு அதிகாரி

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருவண்ணாமலை நுகர்ப்பொருள் வாணிபக்கிடங்கில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சீதா, ஆசிரியை. கணவன்-மனைவி, 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் 2 பேர் என்று மொத்தம் 6 பேர் நேற்று உறவினரின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலையில் இருந்து ஆம்பூருக்கு சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் 6 பேரும் ஆம்பூரில் இருந்து வேலூருக்கு பஸ்சில் வந்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு பஸ்சில் 6 பேரும் ஏறி உள்ளனர். அவர்களின் உடைமைகள் அடங்கிய பைகளை பஸ்சின் உள்ளே மேற்பகுதியில் வைத்தனர். மேலும் சில பயணிகள் அடுத்தடுத்து ஏறி உள்ளனர்.

இதற்கிடையே ராஜேஷ் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்குவதற்காக பஸ்சில் இருந்து இறங்கி கடைக்கு சென்று உள்ளார்.

30 பவுன் நகைகள் திருட்டு

சிறிது நேரத்துக்கு பின்னர் வந்து பார்த்தபோது நகைகள் வைத்திருந்த பை சிறிதளவு திறந்து இருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் சீதா உடனடியாக அந்த பையை திறந்து பார்த்தனர். அதில் வைத்திருந்த 30 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தன. இதுபற்றி அவர்கள் பஸ்சில் இருந்த பயணிகளிடம் கேட்டனர். அவர்கள் எவ்வித பதிலும் கூறவில்லை.

இதையடுத்து இதுகுறித்து ராஜேஷ் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story