மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் நகை திருட்டு


மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் நகை திருட்டு
x

நாட்டறம்பள்ளி அருகேமூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஜங்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). இவரது வீட்டில் மாமியார் ஜெயாயம்மாள் (80) என்பவர் வசித்து வருகிறார். நேற்று காலை ஜெயாயம்மாள் வீட்டு அருகே உள்ள தென்னந்தோப்பில் தென்னை ஓலைகளை பின்னிக் கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த மர்ம பெண் ஒருவர் மூதாட்டியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு உள்ளார். உடனே ஜெயாயம்மாள் வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.

அப்போது அந்த பெண் ஜெயாயம்மாளிடம் வீட்டில் உன்னுடன் யார் வசித்து வருகிறார் என விசாரித்துள்ளார். அதற்கு மருமகன் மட்டும் வசித்து வருவதாக கூறினார். உடனே உனக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருகிறேன், என்னுடன் வா என அழைத்துள்ளார். இதற்கு மூதாட்டி சம்மதிக்கவே, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் கம்மல் உள்ளிட்ட 6½ பவுன் நகை கழற்றி வைத்துவிட்டு வா. நகையோடு வந்தால் முதியோர் உதவித்தொகை கிடைக்காது என கூறியதால், மூதாட்டி வீட்டிற்கு சென்று நகைகளை கழற்றி வைத்துவிட்டு வந்தார்.

அதன் பிறகு அந்த பெண் மூதாட்டியை தன்னுடைய மொபட்டில் உட்கார வைத்து அழைத்து சென்றார். சிறிது தூரம் சென்றதும், தனது மணி பர்சை வீட்டில் வைத்து விட்டதாக கூறி மூதாட்டியை பாதி வழியில் இறக்கி விட்டு விட்டு, வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு மூதாட்டி வீட்டிற்கு சென்று, அங்கு அவர் கழற்றி வைத்திருந்த நகையை திருடிக்கொண்டு, மூதாட்டியிடம் சென்று முதியோர் உதவித்தொகை வழங்கும் அதிகாரி இப்போது இல்லை. நாளை வரச் சொன்னதாக கூறி மூதாட்டியிடம் சாவியை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

அதன் பிறகு மூதாட்டி தனது வீட்டிற்கு நடந்து சென்று வீட்டை திறந்து பார்த்த போது தான் கழற்றி வைத்திருந்த நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மூதாட்டி உடனடியாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story