600 கிலோ காபி பழங்கள் திருட்டு
600 கிலோ காபி பழங்கள் திருடிய 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே சன்னகொல்லியில் சுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் உள்ள செடிகளில் இருந்து காபி பழங்கள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) மகேஸ்குமார் உத்தரவின் படி, சேரம்பாடி இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், தினேஷ்குமார், ராஜ்குமார் மற்றும் போலீசார் காபி பழங்களை திருடி சென்றவர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே வட்டக்கொல்லி பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டு வாசலில் காபி பழங்கள் உலர வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் திருடிய காபி பழங்கள் உலர வைக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வட்டக்கொல்லியை சேர்ந்த சுரேஷ் (வயது 26), சோமன் (35), கோபி (30), சனீஸ் (23), சுனில் (30), கிரீஸ் (30) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 கிலோ காபி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.