பெண்ணிடம் நூதன முறையில் தங்க சங்கிலி அபேஸ்
ஏற்காட்டில் நகை மாடலை மனைவியிடம் காட்டுவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் தங்க சங்கிலியை அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமியை போலீஸ் தேடுகிறது.
ஏற்காடு:
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இறைச்சி கடை
ஏற்காடு டவுன் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருபவர் லட்சுமி. இவர், நேற்று வழக்கம் போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் டிப்-டாப்பாக உடை அணிந்து ஒருவர் வந்தார். அவர், கோழி இறைச்சி கிலோ எவ்வளவு என்று விலை கேட்டபடி லட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
டிப்-டாப்பாக இருந்ததால் அந்த நபர் மீது லட்சுமிக்கு சந்தேகம் வரவில்லை. சிறிது நேரம் பேச்சு கொடுத்த அந்த நபர், லட்சுமியிடம், நீங்கள் கழுத்தில் அணிந்துள்ள தங்க சங்கிலி மாடல் அழகாக உள்ளது என்றும், அதனை தந்தால் பக்கத்து கடையில் காய்கறி வாங்கிக்கொண்டிருக்கும் என்னுடைய மனைவியிடம் காண்பித்து விட்டு திரும்ப கொண்டு வந்து தருவதாகவும் கூறினார்.
3½ பவுன் தங்க சங்கிலி
இதை நம்பிய லட்சுமி, தான் கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை கழற்றி அந்த நபரிடம் கொடுத்தார். நீண்ட நேரம் ஆகியும் தங்க சங்கிலி வாங்கிவிட்டு சென்ற நபர் திரும்ப வரவில்லை என்பதால், அதன்பிறகுதான் லட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த நபரை தேடி அலைந்தார் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து ஏற்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா
அப்போது, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளை லட்சுமியிடம் போலீசார் கண்பித்தனர்.
அந்த காட்சிகளை பார்த்த லட்சுமி, டிப்-டாப்பாக உடை அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் அந்த நபரை அடையாளம் காட்டினார். அதை கொண்டு போலீசார் அந்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்காட்டில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.