சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் அரிசி மூட்டைகள் திருட்டு


சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் அரிசி மூட்டைகள் திருட்டு
x

கும்பகோணத்தில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் ஒரு நபர் அரிசி மூட்டைகளை திருடி சென்றார். இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணத்தில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் ஒரு நபர் அரிசி மூட்டைகளை திருடி சென்றார். இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தினர்.

சூப்பர் மார்க்கெட்

கும்பகோணம் மோதிலால் தெரு பகுதியில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பலர் தங்களது வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் ஆர்டர் செய்து அதனை சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் பணியாளர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு டோர் டெலிவரி செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதிலால் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு போன் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் தொடர்பு கொண்டு 7 மூட்டை அரிசி தேவைப்படுவதாகவும் அதனை கும்பகோணம் பந்தடி மேடை அருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகே டோர் டெலிவரி செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.

அரிசி மூட்டைகள்

உடனடியாக சூப்பர் மார்க்கெட் மேலாளர் வாடிக்கையாளர் கேட்ட 7 மூட்டை அரிசியை கடையில் வேலை பார்க்கும் 2 ஊழியர்கள் மூலம் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வாடிக்கையாளர் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அரிசி மூட்டையை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வாடிக்கையாளர் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் 6 மூட்டை அரிசியை மட்டும் இங்கே இறக்கி விட்டு மேலும் ஒரு மூட்டையை ஜான் செல்வராஜ் நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு பணம் வாங்கிக் கொள்ளும்படி அரிசி மூட்டையை எடுத்து வந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை

அதன்படி அவர்கள் 2 பேரும் 6 அரிசி மூட்டைகளை அந்த நபரிடம் கொடுத்து விட்டு ஒரு அரிசி மூட்டையை மட்டும், அந்த நபர் கூறி முகவரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த நபர் கூறி முகவரி இல்லாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் 2 பேரும் 6 அரிசி மூட்டைகளை கொடுத்த இடத்துக்கு அவர்கள் வந்து பார்த்த போது அந்த நபர் இங்கு இல்லை.

உடனடியாக இதுகுறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பக்ருதீனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் அரிசி மூட்டைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story