தனியார் நிறுவனத்தில் லாரி-கிரேன்களின் பேட்டரிகள் திருட்டு
ஆரல்வாய்மொழியில் தனியார் நிறுவனத்தில் லாரி-கிரேன்களின் பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் தனியார் நிறுவனத்தில் லாரி-கிரேன்களின் பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சர்வீஸ் நிறுவனம்
ஆரல்வாய்மொழியில் வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி(வயது 49). இவர் ஆரல்வாய்ெமாழியில் இருந்து குமாரபுரம் செல்லும் சாலையில் கிரேன் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் கிரேன், லாரிகள் மற்றும் அதற்கான இதர பொருட்களும் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும்.
பேட்டரிகள் திருட்டு
இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு தட்சணாமூர்த்தி அலுவலகத்துக்கு வந்து பார்த்தார். அப்போது நிறுவனத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த லாரி, கிரேன் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து 5 பேட்டரிகள், 40 இரும்பு குழாய்கள், 2 லிப்ட் ஜாக்கி, 6 வீல் பாக்ஸ், 40 அடி நீளமுள்ள 4 இரும்பு சங்கிலி மற்றும் இரும்பு பொருட்கள் மாயமாகி இருந்தது.
நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடர்கள் வளாகத்தின் வெளிக்கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அதை உடைக்க முடியாததால் வெளியே இருந்த பொருட்களை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். மேலும், திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தட்சணாமூர்த்தி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.