நகராட்சி பள்ளியில் பொருட்கள் திருட்டு
விழுப்புரத்தில் நகராட்சி பள்ளியில் பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விழுப்புரம்
பள்ளியில் பொருட்கள் திருட்டு
விழுப்புரம் காமராஜர் வீதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை கடந்த 2-ந் தேதி மாலையில் வகுப்புகள் முடிந்ததும் பூட்டிவிட்டு சென்றனர். 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை பள்ளி திறக்கப்பட்டது.
அப்போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த மாணவர்கள் திடுக்கிட்டு, உடனே இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது பள்ளியில் இருந்த 2 மின் விசிறிகள், கணினி, மேஜைகள், டியூப் லைட்டுகள் ஆகியவை திருடு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மேலும் பள்ளி வளாகத்தில் காலி மது பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகளும் கிடந்தன. இதனால் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், பள்ளியின் மதில் சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்து அங்குள்ள வளாகத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறியதும் பள்ளி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த மேற்கண்ட பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.