கேபிள் ஆபரேட்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு
ஆட்டையாம்பட்டியில் கேபிள் ஆபரேட்டர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பனமரத்துப்பட்டி
ஆட்டையாம்பட்டியில் கேபிள் ஆபரேட்டர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கேபிள் ஆபரேட்டர்
ஆட்டையாம்பட்டி கருப்பையன் கந்தசாமி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). இவர் அரசு கேபிள் நெட்வொர்க் ஆபரேட்டர். இவரது மனைவி லட்சுமி (50), இவர்களுக்கு தனிஷ்குமார் (19) என்ற மகனும், சுஜாதா (16) என்ற மகளும் உள்ளனர். ராஜேந்திரனுக்கு அந்த பகுதியில் பூர்வீக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இட பற்றாக்குறை இருந்ததால் அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து அதிலும் ராஜேந்திரன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் வீட்டை பூட்டி விட்டு மனைவி, மகளுடன் வாடகை வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் பூர்வீக வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து ராஜேந்திரன் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.