பரிகார பூஜை செய்வதாக கூறி நகை, பணம் திருட்டு


பரிகார பூஜை செய்வதாக கூறி நகை, பணம் திருட்டு
x

கோத்தகிரி அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி நகை, பணம் திருடிய தர்மபுரியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி நகை, பணம் திருடிய தர்மபுரியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மர்ம ஆசாமிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருேக கோடநாடு கோடதேன்மந்துவை சேர்ந்தவர் பூவாடகுட்டன். இவருடைய மனைவி ரகுமல்லி. இவர் மகளிர் சுய உதவிக்குழு மூலம் கோடநாடு காட்சிமுனையில் நடத்தப்படும் டீக்கடையை கவனித்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள், டீ வாங்கி குடித்தனர். பின்னர் ரகுமல்லியிடம் உங்கள் முகத்தை பார்த்தால், வாழ்வில் ஏதோ பிரச்சினை உள்ளது போன்று தெரிகிறது, அதற்கு பரிகார பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று கூறினர்.

இதை நம்பிய ரகுமல்லி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது இளைய மகன் விபத்தில் இறந்துவிட்டதாகவும், கணவருடன் மூத்த மகன் விவசாயம் செய்து வருவதாகவும் கூறினார்.

பரிகார பூஜை

அதற்கு அவர்கள், மூத்த மகனும் விரைவில் இறந்து விடுவார், அதை தடுக்க வேண்டுமெனில் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றனர். மேலும் பரிகார பூஜைக்கு ரூ.9 ஆயிரம் கேட்டனர். உடனே ரகுமல்லி, தன்னிடம் ரூ.1,800 உள்ளது, அதை முதலில் தருகிறேன் என்று அவர்களிடம் அந்த பணத்தை கொடுத்தார். பின்னர் ஒரு வெள்ளை துணியை அவரது கையில் வைத்து, அதில் நகைகளை போடுங்கள் பூஜை செய்ய வேண்டும் என்றனர். அதன்படி 6 கிராம் தங்க நகைகளை ரகுமல்லி போட்டார். தொடர்ந்து குடிக்க தண்ணீர் எடுத்து வருமாறு கூறியதும், அதற்காக ரகுமல்லி உள்ளே சென்றார். இதை பயன்படுத்தி வெள்ளை துணியில் இருந்த தங்க நகைகளை திருடிவிட்டு, வெறும் துணியை முடிச்சு போட்டு மஞ்சள் தடவி, திரும்பி வந்த ரகுமல்லியிலடம் கொடுத்து, பூஜை அறையில் வைத்து வழிபடுமாறு கூறிவிட்டு தப்பி சென்றனர்.

கைது

அதன்பிறகு அந்த துணியை அவர் பிரித்து பார்த்தபோது, தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சோலூர்மட்டம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த ஆசாமிகளை வலைவீசி தேடினர். அப்போது ஈளாடா கதவுதொரை பகுதியில் சுற்றித்திரிந்த அந்த ஆசாமிகளை சப்-இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், தர்மபுரி மாவட்டம் செங்குட்டை அருகே கோச்சம்பாடியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(34), ஜீவா(34) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது ெசய்ததோடு பணம், நகையை மீட்டனர்.


Next Story